மார்ச் 21 முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: தமிழன் பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

விருதுநகர்: சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வருகிற 21-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,100 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் பேர் நேரடியாகவும், 4 லட்சம் பேர் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு தொழிலுக்கு பல்வேறு நெருக்கடி என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பட்டாசு வெடிப்பதனால் சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றம், பட்டாசு உற்பத்தியில் 80% பங்கு வகிக்கும் பேரியம் நைட்ரேட் மூலப்பொருளுக்கு தடை விதித்துள்ளது.

அதேபோல் பட்டாசுகளில் மிக முக்கியமாக, அதிகளவில் விற்பனையாக கூடிய சரவெடி பட்டாசுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் பட்டாசு உற்பத்தி செய்யமுடியாத சூழல் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, அரசு பிறப்பித்துள்ள 2 தடைகளையும் நீக்கவேண்டும் அல்லது பேரியம் நைட்ரேட் எனப்படும் முக்கிய மூலக்கூறுக்கு மாற்றாக வேறு ரசாயன மூலப்பொருளை ஒன்றிய வெடிபொருள் கட்டுப்பாட்டுதுறை மூலமாக அறிவித்து, அந்த ரசாயன மூலப்பொருட்களை உபயோகப்படுத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் காத்தலிங்கம் அறிவித்துள்ளார். இச்சங்கத்தின் கீழ் 300-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி பட்டாசு தயாரிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: