போடி அருகே மழைநீர் வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு-அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது புகார்

போடி : போடி அருகே, மழைநீர் வரத்து ஓடையை ஆக்கிரமித்து தோட்டமாக மாற்றி வருவதாக, அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

போடி அருகே, சிலமலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 18ம் கால்வாய் வழிப்பாதையில், மேம்பாலத்திலிருந்து 4 கி.மீ தூரம் செல்லும் அய்யனார் ஓடை 18 மீ அகலம் உள்ளது. இந்த ஓடை சூலப்புரத்தை கடந்து, மெயின் ரோடு வழியாக சென்று, பெருமாள் கோயில் வழியாக, பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் உள்ள கவுண்டன் குளத்தில் சேர்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து வரும் காட்டாறு வெள்ளம், அய்யனார் ஓடை வழியாக கவுண்டன் குளத்தில் தேங்குகிறது. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து, 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், மழைநீர் வரத்து ஓடையான, அய்யனார் ஓடையை சில ஆண்டுகளுக்கு முன் சிலர் ஆக்கிரமித்து நெல்லி தோப்பு, சீமைப்புல் தோட்டம் அமைத்தனர். மேலும், தற்போது ஆக்கிரமித்து தோட்டமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து சூலப்புரம், சிலமலை கிராம மக்கள், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்தனர். இதையடுத்து, போடி தாசில்தார் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து, அவைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து தாசில்தார் அய்யனார் ஓடையில் அளவீடு செய்து 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்தார். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. மேலும், மண் அடித்து ஆக்கிரமித்து தோட்டமாக மாற்றி வருகின்றனர். இது குறித்து போடி ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் மீது பொதுமக்கள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவரும், உள்ளூர்காரர் ஒருவரும் அய்யனார் ஓடையை ஆக்கிரமித்து தோட்டமாக மாற்றி வைத்துள்ளனர். இவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அய்யனார் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வரத்து ஓடையை மீட்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: