கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் 7 மாதமாக ஒரே இடத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானை

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள கீழ்தட்டப்பள்ளம், முள்ளூர் பகுதியில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. அவ்வப்போது குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள், சாலைகளில் உலா வந்து கொண்டு இருந்த யானை  சில நாட்களாக கீழ் தட்டப்பள்ளம் பகுதியில் முகாமிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வருவது வாடிக்கையாக உள்ளது. பிரதான சாலையில் காய்கறி, சரக்கு வாகனங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.

இரவு நேரத்தில் சாலைக்கு வந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்ல வழியின்றி 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே நின்று சாலையில் அங்குமிங்குமாக நடப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல மணி நேரமாக யானை சாலையில் நின்றிருப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் யானையை தொந்தரவு செய்யும் வகையில் வாகனத்தில் ஒளி எழுப்புவது, புகைப்படம் எடுப்பது, கூச்சலிடுவது, விசில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் வாகனங்களை தாக்க ஓடி வருகிறது.

கீழ்தட்டப்பள்ளம் அருகே உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை இரவு நேரத்தில் உலா வருகிறது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து வீட்டின் முன் நெருப்பு எரிய விட்டபடி இரவு நேரங்களில் உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கடந்த 7  மாதத்தில் 2 முறை அரசு பேருந்தையும், ஒரு முறை தனியார் சரக்கு வாகனத்தையும் யானை தாக்கியது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: