வால்பாறை அருகே குட்டிகளுடன் உணவு தேடும் சிங்கவால் குரங்குகள்-வாகன வேகத்தை குறைக்க வனத்துறை அறிவுறுத்தல்

வால்பாறை : வால்பாறையை அடுத்த புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்தில், அழிவின் விளிம்பில் உள்ள உலகின் அரிய வகையான சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. சிங்கமுகத் தோற்றத்துடன், வாலும் சிங்கம் போல் இருப்பதால் சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை புது தோட்டம், சிங்கோனா உள்ளிட்ட பகுதியில் இந்த குரங்குகள் உள்ளதால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒரு கூட்டத்தில் 14 முதல் 80 குரங்கு வரை காணப்படும்.

இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த குரங்குகளின் கர்ப்ப காலம் 170 நாட்கள் ஆகும். இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை என்பதால், பிறந்த  சிறு குட்டிகளுடன் குரங்குகள் உலா வருகிறது. குரங்குகள் குட்டிகளுக்கு மரம் ஏறவும், உணவு சாப்பிடவும், மரக்கிளை களுக்கிடையே தாவிச் செல்லவும் கற்றுக் கொடுத்து வருகிறது.

எனவே, குரங்குகள் பொள்ளாச்சி வால்பாறை சாலையோரங்களில் மெதுவாக செல்வும், குட்டிகளை விளையாடவும் வைக்கிறது.  உயரமான மரங்களுக்கிடையே குட்டிகள் தாவிச் செல்வது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை காண நாள்தோறும் வன ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,``சிறு குட்டிகள் ஏராளம் புதிதாக பிறந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோடாக உள்ளதால் வேகத்தடையும், சாலையின் மேற்புறம் குரங்குகள் கடக்க தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. லாரி, கார், வேன் பேருந்து ஓட்டுநர்கள் புதுத்தோட்டம் பகுதியில் வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும். அதிவேகம் செல்வதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  மேலும் கண்டிப்பாக குரங்குகளுக்கு உணவு பண்டங்களை வழங்க கூடாது’’ என்றனர்.

Related Stories: