4 வழிச்சாலை திட்டத்துக்கு மாற்றுப்பாதை தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து தென்காசி மாவட்டம் புளியரைக்கு நான்கு வழிச்சாலை அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்றன. இந்நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. விவசாயிகளிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே செயற்கைக்கோள் வரைபடம் மூலம் விவசாய நிலங்களில் கற்கள் நடப்பட்டு வருகின்றன.

சுமார் 16 லட்சம் தென்னை மரங்கள் மட்டுமின்றி பல ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களும் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விவசாய நிலங்கள் அருகி வரும் நிலையில், இதுபோன்ற சாலை திட்டங்களுக்காக வலுக்கட்டாயமாக  விவசாய நிலங்களை பறிப்பதை விடுத்து, மாற்றுப்பாதை வழியாக திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக புதிதாக வழிப்பாதை அமைக்காமல், ஏற்கனவே இருக்கின்ற சாலைகளை  அகலப்படுத்தினாலே திட்டத்தை செயல்படுத்த முடியும் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த விசயத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சி விவசாயிகளுக்கு துணை நின்று, அவர்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: