விவேகானந்தர் பாறை முதல் திருவள்ளுவர் சிலை வரை ₹37 கோடியில் இணைப்பு நடைபாலம்-தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு

சென்னை : கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலை பாறையையும் இணைக்கும் ஏறத்தாழ 140 மீட்டர் நீளம் கொண்ட கடல்சார் பாலம் ரூ.37 கோடி செலவில் அமைக்க 50 சதவீதம் ஒன்றிய அரசின் நிதியுதவியுடனும், 50 சதவீதம் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சொந்த நிதியில் இருந்தும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கடல்சார் நடைபாலம் அமைக்க தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல் பாலம் கட்டுவதற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த, டெண்டர் 2022ம் ஆண்டு மே 4ம் தேதி பிற்பகல் 2 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும். பணிகளின் விவரங்கள், பணிகளின் தோராயமான மதிப்பு, டெண்டர் ஆவணங்களின் இருப்பு மற்றும் அனைத்து விவரங்களும் 14ம் முதல் அரசு இணையதளத்தில் https://tntenders.gov.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டெண்டரில் ஏதேனும் மாற்றங்கள், திருத்தங்கள் இருந்தால், அது அரசு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: