வரும் 13ம் தேதி துவங்குகிறது சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் பச்சை பட்டினி விரதம்: மாசி கடைசி ஞாயிறு துவங்கி 5 வாரம் பூச்சொரிதல் விழா

திருச்சி,: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 13ம் தேதி அம்மன் பச்சை பட்டினி விரதம் துவங்குகிறது. இதையடுத்து ஒவ்வொரு வாரம் ஞாயிற்று கிழமைகளில் பூச்சொரிதல் விழா பக்தர்களால் வெகு விமரிசையாக நடக்க உள்ளது.அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மாசி மாத கடைசி ஞாயிறு துவங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரை 28 நாள் அம்மன் மேற்கொள்ளும் பச்சை பட்டினி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விரதம் வரும் 13ம் தேதி துவங்குகிறது. அம்மன் பச்சை பட்டினி விரதத்தின் போது அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம், கரும்புசாறு, இளநீர் ஆகியவை நைவேத்தியமாக அம்மனுக்கு படைக்கப்படுகிறது. அம்மனுக்கு ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்த பக்தர்கள் பலவித மலர்களை கொண்டுவந்து சாற்றுவது வழக்கம்.

இந்நிலையில் வருகிற 13ம் தேதி காப்புக்கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்குகிறது. முதல் பூ வை இந்து சமய அறநிலையத்துறை மூலம் யானை மீது வைத்து தேரோடும் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட உள்ளது. தைத்தொடர்ந்து 8 பட்டி கிராமமக்கள் பூக்களை கொண்டு வந்து சாற்றுவர். விடிய, விடிய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அலங்கார வாகனத்தில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாத்துவர்.கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பக்தர்கள் இன்றியும், ஆரவாரமின்றியும் கோயில் ஊழியர்களால் நடத்தப்பட்டது. தற்போது இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாலும் இந்தாண்டு சமயபுரம் பூச்சொரிதல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் உத்தரவின்பேரில் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: