முதுமலையில் சீரமைக்கப்படாத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வழியாக மசினகுடி ஊட்டி செல்லும் சாலையில் தெப்பக்காட்டில் உள்ள மாயாற்றின் மீது கட்டப்பட்டிருந்த நூற்றாண்டு பழமையான பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் தெப்பக்காட்டில் உள்ள விடுதிகள் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. மாயாற்றின் மீது கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தின்  இரு பகுதிகளையும் இணைத்து அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

வாகனங்கள் செல்வதற்கு வசதியாக சாலை சீரமைப்பு பணிகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், சாலையின் ஒரு பகுதி மண் சாலையாகவே உள்ளது. சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு மேல் உள்ள இந்த மண் சாலையில் வாகனங்கள் சென்று வரும்போது புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைய இன்னும் பல மாதங்கள் பிடிக்கும் என்பதால் இந்த மாற்று சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாற்றுச் சாலையில் உள்ள சீரமைக்கப்படாத பகுதியை தார்ச்சாலையாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளுர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: