ஸ்ரீகாளஹஸ்தி மகாசிவராத்திரி பிரமோற்சவ நிறைவையொட்டி அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் சுவாமி, அம்மையார் வீதி உலா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி மகாசிவராத்திரி பிரமோற்சவ நிறைவையொட்டி பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்மையார் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வீதி உலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த மாதம் 24ம் தேதி வருடாந்திர மகாசிவராத்திரி பிரமோற்சவம் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பல்லக்கு சேவை வெகுவிமரிசையாக நடந்தது.

முன்னதாக, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தங்க ஆபரணங்களும், பட்டு வஸ்திரங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரண்டு பல்லக்குகளில் சுவாமி, அம்மையார்களை அமர்த்தி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மகா சிவராத்திரி விழாவின் நிறைவு வீதி உலா என்பதால் பஞ்சமூர்த்திகள் முன்னால் செல்கையில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் 2 பல்லக்குகளில் பவனி வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அப்போது கோலாட்டம், தீயினால் சாகசங்கள், டிரம்ஸ், மேளதாளங்கள், கேரளா செண்டை மேளங்கள், மற்றும் பல்வேறு சுவாமி வேடமணிந்த பக்தர்கள், குதிரை ரதம், மகிஷாசுரமர்தனி ரதம், மங்கல வாத்தியங்களுடன் பக்தர்களை பல்லக்கு சேவை கண் கவரும் வகையில் இருந்தது.இதில் கலந்து கொண்ட பகதர்கள் ‘ஹர ஹர மஹாதேவா சம்போ சங்கரா’ என்ற சிவநாம ஸ்மரனத்துடன் பல்லக்கு சேவை நான்கு மாடவீதிகளில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன், கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று ஏகாந்த சேவையுடன் பிரமோற்சவம் நிறைவடைந்தது.

Related Stories: