நல்ல விஷயங்கள் இருந்தாலும் யூடியூபை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

மதுரை: யூடியூபை பலரும் தவறாக பயன்படுத்துவதாக ஐகோர்ட் கிளை நீதிபதி கூறியுள்ளார். திருச்சியை சேர்ந்தவர் யூடியூபர் துரைமுருகன். இவரை, முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக திருப்பனந்தாள் போலீசார் கடந்தாண்டு கைது செய்தனர். இந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதற்காக, இனிவரும் காலங்களில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசமாட்டேன் என துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் உறுதிமொழி உத்தரவாதம் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், ஐகோர்ட் கிளையில் அளித்த உறுதிமொழி உத்தரவாதத்தை மீறி தொடர்ந்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, யூடியூப்பில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதனை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இது தொடர்பான விபரங்களை, நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தாக்கல் செய்ய வேண்டுமென கூறி, மார்ச் 17க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: