காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசித்தி பெற்ற மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி-பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்தாண்டு மாசி-பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடந்தது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 5.45 மணிக்கு கொடியேற்றமும், பின்னர் கொடிமரத்திற்கு காப்பு கட்டுதலும் நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இன்று அம்பாளுக்கு காப்பு கட்டிய பிறகு பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக வரிசையில் நின்று காப்பு கட்டி கொண்டனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளுக்கு பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல், பூ மிதித்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்துவர்.

மார்ச் 15ம் தேதி அம்மனுக்கு முளைப்பாரி, கரகம் தீச்சட்டி போன்றவைகளும், மார்ச் 16ம் தேதி பால் குடம் ஊர்வலம், பூக்குழி இறங்குதல், வேல் போடுதல், பறவை காவடி போன்றவை நடைபெறும். 17ம் தேதி அம்மன் திரு வீதி உலா நடைபெறுகிறது. பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் சங்கங்கள் சார்பில் மண்டகப்படி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறநிலைய துறை அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Related Stories: