பணம் பறிப்பதற்காக கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு; ராஜஸ்தான் மாநில சிறுவன் கைது

செங்கல்பட்டு: மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தன்னுடைய பேஸ்புக்கில் உள்ள புகைப்படத்தை எடுத்து, மர்ம நபர் பேஸ்புக்கில், தன் பெயரில் போலியான கணக்கு உருவாக்கி, தன்னுடைய நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்றதாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் தனிப்படைஅமைக்கப்பட்டு தீவிர விசாரனை மேற்கொண்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மர்ம நபர் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் சென்று விசாரித்தனர். அதில், கலெக்டர் ராகுல்நாத் பெயரில் போலியான கணக்கு உருவாக்கி, அவரது நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்றவர் கோ கிராமத்தை சேர்ந்த மொஹமத் என்பவரின் மகன் (17 வயது சிறுவன்) என தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து பரத்பூர் மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நேற்று செங்கல்பட்டு மாவட்ட இளஞ்சிறார் நீதி குழமத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில்  ஒப்படைத்தனர்.

இது குறித்து, மாவட்ட காவல் துறையினர் சார்பாக, பொதுமக்கள் மற்றும் பெண்கள் தன்னுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். இதுபோல் எவரேனும் பேஸ்புக்  மெசஞ்ர்ஆப்  மூலம் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் கூகுள்-பே ஜி-பே பேடிஎம் அல்லது வேறு ஏதேனும் யுபிஐ மூலம் மிகவும் அவசரம் என்று கூறி பணம் கேட்டால் பணத்தை அனுப்ப வேண்டாம். சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் புகார்களை பதிவிடவும். சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதியிழப்புகளுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: