சென்னையில் 18 நாட்கள் நடந்த புத்தகக் காட்சியில் ரூ.12 கோடிக்கு புத்தகங்கள் அமோக விற்பனை: பபாசி சங்கம் தகவல்

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 45வது சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் முடிந்த நிலையில், சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். இதுவரை ரூ.12 கோடிமதிப்பு புத்தகங்கள் விற்றுள்ளதாக, பபாசி சங்கம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 45வது புத்தகக் காட்சி  பிப்ரவரி 16ம் தேதி தொடங்கியது. புத்தகக் காட்சியில் 800 அரங்குகள் இடம் பெற்றன. இவற்றில் சுமார் 1 லட்சம் தலைப்பில் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இது தவிர அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி, மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 10 அரங்குகள் இடம் பெற்றன.

தமிழகம் தவிர மும்பை, கேரளா, கர்நாடகா மற்றும் டெல்லியில் இருந்து புத்தக விற்பனையாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர். தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஒன்றிய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், மற்றும் தொல்லியல் துறை ஆகிய நிறுவனங்களும் இந்த காட்சியில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து 18 நாட்கள் நடந்த, இந்த புத்தக காட்சியை கண்டுகளிக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்ததால், காட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே 40 ஆயிரம் பேர்  டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.

காட்சிக்கான அரங்கு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 3300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருநை ஆற்றின் நாகரிக தொல்பொருள் கண்காட்சி அரங்கு காட்சி வளாகத்தை ஒட்டி அமைக்கப்பட்டு இருந்ததால்  அதிக அளவில் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். கடந்த 18 நாட்களாக நடந்த புத்தக காட்சிக்கு நேற்று வரை சுமார் 15 லட்சம் வாசகர்கள், பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதுவரை ரூ. 12 கோடி மதிப்பு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. நேற்றுடன் முடிவடைந்த இந்த புத்தக காட்சி, வரும் 18ம் தேதி முதல் திருவள்ளூரில் தொடங்க உள்ளது.

Related Stories: