தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!: மதுரை சிறப்பு நீதிமன்றம் அதிரடி

மதுரை: கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார். கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். வேறுசாதி பெண்ணை திருமணம் செய்ததால் ஆணவ படுகொலை செய்யப்பட்டு, பள்ளிபாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் வீசப்பட்டது. கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு சரிவர நடைபெறாததால் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 106 பேர் விசாரிக்கப்பட்டனர். 2019 மே 5 முதல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 8ம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதில், கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியுள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியான மாணவி ஸ்வாதி உள்பட சிலர் பிறழ் சாட்சியான போதும் குற்றசாட்டுகளை காவல்துறை நிரூபித்தது என தெரிவித்து கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோதே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேரை விடுவித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஹியர் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories: