மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான  மயில் சிலை காணாமல்போனது குறித்து  பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என  சர்வ சக்தி விநாயகர் கோயில்  ஆய்வின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு நடத்தினார். அப்போது, கோயிலில் உள்ள குறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து நிருபர்களை சந்தித்து அமைச்சர் கூறியதாவது: அயனாவரம் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோயில் 50 ஆண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. கோயிலின் உயர்வு, பக்தர்களின் வசதிக்கு என்னென்ன செய்யவேண்டும் என கேட்டுள்ளேன்.

இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருக்கிறது. எந்தவொரு அரசியல் கலப்பும் இல்லாமல் சிறப்பாக சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. வரும் காலங்களில் சிவராத்திரி விழா இன்னும் மிக சிறப்பாக நடத்தப்படும்.  எம்மதமும் சம்மதம் என நினைக்கும் கட்சி திமுக. எங்களுக்கு ஆத்திகர்களும், நாத்திகர்களும் வாக்களித்திருக்கிறார்கள். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மயில் சிலை காணாமல் போனது குறித்து பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் குளத்தில் சிலை உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும். நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார். பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில் நல்ல திட்டங்கள் இருந்தால் அவை எடுத்துக்கொண்டு செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார். ஆய்வின்போது, இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன், திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, வில்லிவாக்கம் பகுதி செயலாளர் வாசு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சர்வ சக்தி விநாயகர் கோயில் வரலாறு

சென்னை அயனாவரத்தை சேர்ந்த தம்பதி கணேஷப்பா, கோவிந்தம்மாள் ஆகியோர், அயனாவரம் மேட்டுத்தெருவில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 40 வருடத்திற்கு முன்பு சர்வ சக்தி விநாயகர் கோயில் கட்டினர். கோயிலை கணேஷப்பா பராமரித்து வந்தார். அவருக்கு பிறகு அவரது மனைவி கோயிலை பராமரித்து வந்தார். மறைவுக்கு முன்பு கணேஷப்பா எழுதிய உயிலில் எனது மனைவிக்கு பிறகு இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதன்படி கோவிந்தம்மாள் மறைந்து 2 வருடங்கள் ஆன நிலையில், கணேஷப்பாவின் ஆசைப்படி மேட்டுத்தெரு மக்களின் முன்னிலையில் இன்று இந்து சமய அறநிலைய துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: