108ல் 102 இடங்களை கைப்பற்றி உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் வெற்றி: அனைத்து இடத்திலும் பாஜ தோல்வி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 108ல் 102 நகராட்சிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜ ஒரு நகராட்சியை கூட கைப்பற்றவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகின்றது. இங்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து 10 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கூச்பெகார் மாவட்டத்தில் உள்ள தின்ஹட்டா நகராட்சியில் போட்டியின்றி திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 108 நகராட்சிகளில் கடந்த ஞாயிறன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102 நகராட்சிகளை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எதிர்கட்சி தலைவரும், நந்திகிராமில் பாஜ எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் கான்தி நகராட்சியை திரிணாமுல் காங்கிரசிடம் பறிகொடுத்துள்ளனர். சுவேந்து அதிகாரியின் தந்தை சிசிர் அதிகாரி 1971-2009ம் ஆண்டு வரை 1981-1986ம் ஆண்டை தவிர்த்து 25 ஆண்டுகள் நகராட்சி தலைவராக இருந்துள்ளார். அவர் எம்பியானவுடன் அவரது இளைய மகன் திப்யேந்து அதிகாரி தலைவரானார். திப்யேந்து 2016ம் ஆண்டு இடைத்தேர்தலில் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பின், அவரது இளைய சகோதரர் சோபேந்து நகராட்சி தலைவர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது சுவேந்து பாஜவுக்கு தாவிய நிலையில், கான்தி நகராட்சியை திரிணாமுல் தன்வசம் கொண்டுவந்துள்ளது. மேலும் தேர்தலில் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

* பணிவுடன் பணியாற்றுங்கள்

முதல்வர் மம்தா பானர்ஜி  தனது டிவிட்டர் பதிவில், ‘‘மற்றொரு ஆணையை எனக்கு வழங்கியதற்காக அனைவருக்கும் இதயங்கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றி பெற்ற திரிணாமுல் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி நமது பொறுப்பையும், அர்ப்பணிப்பையும் அதிகரிக்கட்டும். வெற்றி பணிவு மனப்பான்மையை வழங்கட்டும். அனைவரும் ஒன்றிணைந்து அமைதி, செழிப்பு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுவோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: