தவளக்குப்பம் அருகே அடுத்தடுத்து 3 பைக்குகள் மீது கார் மோதல்-பாலத்தில் இருந்து கீழே விழுந்து பால் வியாபாரி பலி

பாகூர் : புதுச்சேரி, கிருமாம்பாக்கம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56), பால் வியாபாரி. இவர் நேற்று காலை வழக்கம் போல் புதுச்சேரியில் பால் விநியோகம் செய்து விட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.புதுச்சேரி- கடலூர் சாலை தவளக்குப்பம் தனியார் படகு குழாம் அருகே வந்தபோது, எதிரே கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, ரவிச்சந்திரன் மீது மோதியது. அதோடு நிற்காமல் மேலும் இரண்டு பைக்குகளை இடித்து தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவிச்சந்திரன் பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், உடனடியாக ஓடிச்சென்று படுகாயமடைந்த ரவிச்சந்திரன் மற்றும் மற்ற இரண்டு பைக்குகளில் வந்த சேலியமேட்டை சேர்ந்த சந்தோஷ்குமார் (43), ஹேமநாத் (5) மற்றும் புதுவையை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் ஆகியோரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ரவிச்சந்திரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், கும்பகோணத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் அப்சலா ஹமீத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக கடலூர்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அடிக்கடி விபத்து: நோணாங்குப்பம் பாலம் முதல் தவளக்குப்பம் தனியார் பெட்ரோல் பங்க் வரையிலான சாலை பருவமழையின் போது கடுமையாக சேதமடைந்தது. இதன்பின்னர் அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் பேட்ஜ் ஒர்க் செய்தனர். இப்பணிகளை முறையாக செய்யாததால் சாலை குண்டும், குழியுமாகவே உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து, கனரக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இச்சாலையில் மேடு, பள்ளம் இல்லாத வகையில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: