ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழகம் - சத்தீஸ்கர் டிரா

கவுகாத்தி: தமிழகம் - சத்தீஸ்கர் அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை எலைட் எச் பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 470 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அபராஜித் 166, இந்திரஜித் 127, ஷாருக் கான் 69 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய சத்தீஸ்கர் அணி 3ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஹர்பிரீத் சிங் 149 ரன், வீர் பிரதாப் சிங் 3 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ஹர்பிரீத் 170 ரன் (380 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்), வீர் பிரதாப் 25 ரன் (134 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அபராஜித் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (133.3 ஓவர்). ரவி கிரண் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர் 4, அபராஜித் 3, சித்தார்த் 2, முகமது 1 விக்கெட் வீழ்த்தினர். 166 ரன் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய சத்தீஸ்கர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஹர்கட் 25, அஷுதோஷ் 16, ஷஷாங்க் 67 எடுத்தனர். கேப்டன் ஹர்பிரீத் 43 ரன், சுமித் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெற்றி முனைப்புடன் கடும் நெருக்கடி கொடுத்த தமிழக வீரர்கள், நூலிழையில் வாய்ப்பு கை நழுவியதால் ஏமாற்றம் அடைந்தனர். சித்தார்த், சாய் கிஷோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். அபராஜித் 2 விக்கெட் கைப்பற்றியதுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக தமிழக அணிக்கு 3 புள்ளிகளும், சத்தீஸ்கருக்கு 1 புள்ளியும் கிடைத்தது. எச் பிரிவில் சத்தீஸ்கர் (7 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகம் (6), ஜார்க்கண்ட் (6), டெல்லி (1) அடுத்த இடங்களில் உள்ளன. தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணியை சந்திக்கிறது. மிக முக்கியமான இப்போட்டி கவுகாத்தியில் மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: