வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முத்துமலை முருகன் சிலை: வரும் 6ம்தேதி கும்பாபிஷேக விழா

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூரில் 146 அடி உயரத்தில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலை குகை கோயிலின் நுழைவு வாயிலில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ளது. இது 140 அடி உயரத்தில் (42.7 மீட்டர்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முருகன் சிலை, சர்வதேச அளவில் இந்துக்களின் புனித திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மலேசியா நாட்டின் பத்துமலையில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த, தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியாரின் குழுவினர், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூரில் முத்துமலை அடிவாரத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசியா பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரம் கூடுதலாக 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையை வடிவமைத்துள்ளனர்.

கடந்த 2016ல் துவங்கி 5 ஆண்டுகளாக பணி நடந்து வருகிறது. தற்போது சிலை முழு வடிவம் பெற்றுள்ளது. முத்துமலை முருகன் சிலையின், திருமேனி கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், மேல்பூச்சு மற்றும் ஆடை, ஆபரணங்களுக்கு வர்ணம் தீட்டும் பணியும் முடிவடைந்துள்ளது. முருகன் திருவுருவத்தை பக்தர்கள் முழுமையாக கண்டு ரசிக்க வசதியாக, 146 அடி உயரத்திற்கும் நவீன லிப்ட் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ம்தேதி இந்த முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவுசெய்துள்ளனர்.

Related Stories: