சிவாலய ஓட்டம் நடைபெறும் திக்குறிச்சி மஹா தேவர் கோயில் சாலை துண்டிப்பு-இந்து முன்னணி போராட்டம்

மார்த்தாண்டம் :சிவாலய ஓட்டம் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திக்குறிச்சி மஹாதேவர் கோயில் சாலையில் பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து சிவாலய ஓட்டம் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர், பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விரதமிருக்கும் பக்தர்கள் பனிரெண்டு சிவாலயங்களுக்கு ஓடியே சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் வரும் 28 தேதி நடைபெற உள்ளது. தமிழகம் கேரளாவை சேர்ந்த ஐந்து லட்சம் பக்தர்கள் பாரம்பரியம் மிக்க இந்த புனித யாத்திரையில் பங்கேற்பார்கள். இந்நிலையில் இந்த சிவாலயங்களுக்கு செல்லும் சாலைகள் பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

 இதனிடையே இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் ஆலயம் அருகே வள்ளக்கடவு பகுதியில் மழை நீர் ஓடையில் சிறு பால பணிக்காக சாலை தோண்டபட்டு ஆறுமாதத்திற்கு மேலாக பணிகள் ஆமை வேகத்தில் நடந்துவருகிறது. தற்போது இந்த சாலைவழியாக தான் மூன்றாவது சிவாலயத்திற்கு பக்தர்கள் செல்ல வேண்டும். மேலும் அப்பகுதி பொதுமக்களும் இந்த பணி முடியாததால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் இந்த சாலை பணிகளை உடனே முடிக்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் வள்ளக்கடவு பகுதியில் மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசாசோமன் தலைமையில்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

 சம்பவ இடத்திற்கு வந்த  தக்கலை சரக டிஎஸ்பி தலைமையிலான போலீசார் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறியது.

இரண்டு நாட்களில் பணிகள் முடிக்கப்படாவிட்டால் ஞாயிற்றுகிழமை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் குழிச்சல் செல்லன், மேல்புறம் ஒன்றிய தலைவர் சந்திரன், பொதுசெயலாளர் ராஜன், பகோடு பஞ்சாயத்து தலைவர் முருகானந்த பிரசாத், திக்குறிச்சி பொறுப்பாளர் சுஜின், பாஜக மேல்புறம் ஒன்றிய ஊடக பிரிவு செயலாளர் உட்பட இந்து முன்னணி இயக்கத்தினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: