எருமப்பட்டி பகுதியில் மல்லிகை சீசன் தொடக்கம்-வெளி மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு

சேந்தமங்கலம் : எருமப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மல்லிகை சீசன் களை கட்டியுள்ள நிலையில், விற்பனைக்காக வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

எருமப்பட்டி ஒன்றியம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, கோடங்கிப்பட்டி, பவித்திரம், செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மல்லிகை சாகுபடி செய்துள்ளனர். கடந்த 6 மாதமாக மழை காலங்களில் மல்லிகை சீசன் இல்லாததால் வரத்து குறைவாக இருந்தது.

தற்போது, வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. எருமப்பட்டி பகுதியில் கிடைக்கும் மல்லிகையில் மிகுந்த வாசனை கிடைப்பதால் வெளி மாவட்டங்களுக்கு அதிகளவில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. மல்லிகை கொள்முதலுக்காக கோவை மற்றும் திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளது.

சீசன் இல்லாத காலங்களில் விவசாயிகளே பூக்களை பறித்து நாமக்கல்லில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தனர். தற்போது, சீசன் களை கட்டியுள்ளதால் தினமும் 4 டன் மல்லிகைப் பூக்கள் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ₹500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் சீசன் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: