லவ்டேல் - கேத்தி வரை மலை ரயில் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்: வனத்துறை நடவடிக்கை

மஞ்சூர்: லவ்டேல் முதல் கேத்தி வரை மலை ரயில் பாதையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் அகற்றினார்கள். நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகளில் பலரும் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை மலை ரயிலில் பயணிக்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் உடன் எடுத்து வரும் திண்பண்டங்கள் அடங்கிய பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய பின் வீணாகும் உணவுகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை ரயில் பாதையில் வீசி விடுகின்றனர்.

இதனால் ரயில் பாதை இருபுறங்களிலும் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்கள் சிதறி கிடக்கிறது. இதில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன் பிளாஸ்டிக் கழிவுகளால் காட்டு யானைகள் வனவிலங்குகளும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மலை ரயில் பாதையில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்ற வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மலை ரயில் பாதையின் இருபுறங் களிலும் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி துவங்கியது.

குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில் வனவர்கள் ரவிக்குமார், பரமசிவம் மற்றும் வனத்துறையினர், தன்னார்வலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர். லவ்டேல் முதல் கேத்தி வரை சுமார் 4 கிமீ தூரம் ரயில் பாதையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், உணவு பொருட்கள் அடைத்து வைக்கும் பாக்கெட்டுகள் மற்றும் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

Related Stories: