ஓட்டை உடைச்சல் செம்பு பித்தளைக்கு பேரீச்சம் பழம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடலில் சமாதி கட்ட நாசா முடிவு: தானாக கீழே விழுந்தால் பெரும் நாசம்

கேம்பிரிட்ஜ்: காலாவதியான கருவிகள், பாகங்களுடன் செயல்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தை செயலிழக்க செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா உட்பட பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்), விண்வெளியில் கடந்த 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில், விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். முதலில் இதை அமைத்தபோது, இதை 15 ஆண்டுகள் மட்டும் பயன்படுத்த திட்டமிட்டது. ஆனால், இப்போது 21 ஆண்டுகளை கடந்த பிறகும் அது செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதன் ஆயுட்காலம் 2024ம் ஆண்டு வரை நீடிக்குமா? என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில், இதை வரும் 2031ம் ஆண்டு வரையில் பயன்படுத்த நாசா திட்டமிட்டு இருக்கிறது.

இந்நிலையில், இந்த விண்வெளி நிலையத்தின் முக்கிய கருவிகள், பாகங்கள், உபகரணங்கள் 80 சதவீதம் காலாவதியாகி விட்டன. இதில் ஏற்பட்டுள்ள சிறிய விரிசல்கள் மோசமடைந்து பெரிய விரிசல்களாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால், இந்த விண்வெளி நிலையத்தை பசிபிக் கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள `விண்கலத்தின் கல்லறை’ என்று அறியப்படும் `பாயின்ட் நெமோ’ என்ற இடத்தில் அதனை மூழ்கடிக்க நாசா திட்டமிட்டுள்ளது. நீண்ட காலமாக தொடர்ந்து பல்வேறு கோளாறுகளைச் சந்தித்து வரும் சர்வதேச விண்வெளி நிலையம், தானாக கீழே விழுந்தால் அதன் பாதிப்புகள் இரட்டை கோபுர தாக்குதலை விட மிக மோசமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக இருப்பினும், இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தை அழிக்கும் முன்பாக, அதில் புதிதாக பொருத்தப்பட்ட கருவிகள், பாகங்கள், உபகரணங்களை அகற்றி, எதிர்காலத்தில் நிறுவப்படும் சர்வதேச விண்வெளி மையங்களில் பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இதன் மற்ற பகுதிகள் விண்வெளி குப்பையாக மாறும்.

தானாக விழுந்த ஸ்கைலாப்

இதற்கு முன்பு, 1979ம் ஆண்டு நாசாவின் ஸ்கைலாப் நிலையம் கட்டுப்பாட்டை இழந்து ஆஸ்திரேலியாவில் தானாக விழுந்த போது பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், அதுவே தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தை அழிப்பதற்கான திட்டத்தை உருவாக்க வழி வகுத்துள்ளது.

Related Stories: