தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிறைவு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்திவந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் சாட்சிகள் விசாரணை இன்றுடன் நிறைவுபெற்றது.தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் பலர் தன்னிச்சை போராட்டம் நடத்தினர். அச்சமயம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி இந்த ஆணையம் தனது விசாரணையை துவங்கியது. அச்சமயம் விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தொடர்ந்து சாட்சிகளின் விசாரணை கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக மேலாக நீடித்தது. தற்போது 36வது கட்ட விசாரணை இன்றுடன் நிறைவடைகிறது. 36கட்ட விசாரணையில் இதுவரை 1,048 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதுடன், 1,544 ஆவணங்களையும் குறியீடு செய்துள்ளது.

இறுதி விசாரணையில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஏற்கனவே ஒரு நபர் ஆணையம் இடைக்கால அறிக்கை ஒன்றை 2 மாதங்களுக்கு முன்பு அரசிடம் சமர்ப்பித்தது. இந்த ஆணையத்தின் காலக்கெடு இம்மாதம் 22ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்னரே அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: