தனியார் ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டு திருமலை முழுவதும் இலவச சாப்பாடு: ரூ.3,096 கோடி பட்ஜெட் தாக்கல்

திருமலை: திருப்பதி திருமலையில் உள்ள தனியார் ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டு, பக்தர்களுக்கு கோயிலின் சார்பில் அன்ன பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022-2023ம் ஆண்டுக்கு ரூ.3096.40 கோடியிலான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தலைமையில் நேற்று நடந்தது. பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

* திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த நிதியாண்டு ரூ.3,000.76 கோடிக்கு பட்ஜெட் போடப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.3096.40 கோடியில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போன்று இலவச தரிசனத்தில் விரைவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* சுப்ரபாதம், அர்ச்சனை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் மீண்டும் தொடங்கப்படும். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும்.

* அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.230 கோடியில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டப்படும்.

* திருமலையில் உள்ள தனியார் ஓட்டல்கள், ரெஸ்டாரெண்ட்கள் முற்றிலும் மூடப்பட்டு, முழுவதும் அன்னபிரசாதம் மட்டும்  வழங்கப்படும்.

* பக்தர்கள் பணம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிடுவதை முற்றிலும் இல்லாமல் செய்யப்படும். சாதாரண பக்தர்கள் முதல் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவருக்கும் அன்னப் பிரசாதம் மட்டுமே வழங்கப்படும்.

* அறிவியல் மையம் அமைக்க 70 ஏக்கர் வழங்கப்பட்ட நிலையில், அதில் 20 ஏக்கர் மட்டும் அறிவியல் மையத்திற்கு வழங்கப்படும். மீதமுள்ள 50 ஏக்கரில் தியான மையம், யோக மையம், பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் கூடிய ஆன்மீக நகரம் அமைக்க ஏப்ரலில் அடிக்கல் நாட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: