மோடி அரசு விளம்பரத்தில் மட்டுமே தெரிகிறது மத உணர்வுகளை தூண்டி பாஜ, ஆம் ஆத்மி அரசியல்: பிரியங்கா காட்டம்

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, பதான்கோட்டில் நடந்த பேரணியில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரம் செய்தார். அதில் அவர் பேசியதாவது: மோடி ஆட்சி என்பது விளம்பரங்களில் மட்டுமே உள்ளது. நாட்டில் ஆட்சி செய்யவில்லை. விளம்பரத்துக்காக மட்டுமே ஆண்டுக்கு ரூ.2,000 கோடி செலவிடப்படுகிறது. நாட்டில் ஆட்சி இருந்திருந்தால் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி ஏற்றமும் இருந்திருக்காது. வேலைவாய்ப்பை உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், அவரது நண்பர்களுக்கு விற்கப்பட்டு இருக்காது.

நாட்டில் உள்ள ஏழைகள், சிறு வணிகர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர் பற்றி யார் கவலைப்படுகிறார்கள். பாஜ, ஆம் ஆத்மி கட்சிகள் அரசியலுக்காக மக்களின் மத உணர்வுகளை தூண்டுகின்றன. அவர்கள் வளர்ச்சியை செய்யவில்லை. மோடியும், கெஜ்ரிவாலும் பஞ்சாபியத்தைப் பற்றி பேசுவதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. பஞ்சாபியத் என்பது ஒரு உணர்வு. உங்களுக்கு முன் பஞ்சாப் மற்றும் பஞ்சாபியத்தை பற்றி பேசுபவர்களில் ஒருவர் (மோடியை குறிப்பிடுகிறார்) கோடீஸ்வர நண்பர்களின் முன் பணிந்துள்ளார். இரண்டாமானவர் கெஜ்ரிவால். அரசியலுக்காகவும், அதிகாரத்திற்காகவும், அவர் யார் முன் வேண்டுமானாலும் தலை வணங்குவார். அதுதான் உண்மை,’ என்றார்.

Related Stories: