புதுக்கோட்டையில் மட்டும் அதிமுக கூட்டணி பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

ஆலங்குடி: பாஜ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது. அதிமுக- பாஜ இடையே நடந்த வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதிக இடங்களை கேட்டு பாஜ நெருக்கடி கொடுத்தது. இதை அதிமுக ஏற்காததால், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து பாஜ விலகியது. தற்போது தமிழகம் முழுவதும் பாஜ தனித்து போட்டியிடுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளது என அதிமுகவை, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், பாஜ கூட்டணியை விட்டு சென்றது நன்மைதான் என்று பகிரங்கமாக பேசினார். அதேபோல் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேவையற்ற கிரகங்கள் விலகியது. இனி நமக்கு நல்ல சகுனம் தான் என்று கூறினார். பாஜ கூட்டணியில் இருந்ததால் தான், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தோற்றோம். அந்த கட்சி விலகியது நல்லது என்று அதிமுக தலைவர்கள் கருதினர்.

 இந்தநிலையில் புதுக்கோட்டையில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி 10வது வார்டில் பாஜ சார்பில் சுமதி, 11வது வார்டில் பாஜ சார்பில் ராஜாமணி போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்து பேசினார். அப்போது வேட்பாளர்கள் 2 பேரும் அருகில் இருந்தனர்.

 இதுபற்றி விஜயபாஸ்கர் தரப்பில் விசாரித்த போது, கீரமங்கலம் பேரூராட்சியில் மட்டும் அதிமுக- பாஜ இடையே கூட்டணி அமைந்துள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளிலும், பாஜ 2 வார்டுகளிலும், தமாகா 1 வார்டிலும் போட்டியிடுகிறது. இதனால் தான், பாஜ வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரித்தார் என்றனர். தமிழகம் முழுவதும் பாஜ தனித்து போட்டியிடும் நிலையில், கீரமங்கலம் பேரூராட்சியில் மட்டும் கூட்டணி வைத்து பாஜ வேட்பாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆதரவு திரட்டியது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: