14,584 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால்வாக்கு அனுப்பி வைப்பு உதவி தேர்தல் அலுவலரிடம் 22க்குள் சேர்க்க வேண்டும்: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தபால் வாக்குகளை முறையாக செலுத்தி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அஞ்சல் வழியாகவோ, நேரடியாகவோ அல்லது 22ம் தேதி காலை 8 மணிக்குள் வாக்கு எண்ணும்  மையத்திலோ சேர்க்க வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப்  சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, ஒன்றிய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை  நிறுவனங்களைச் சார்ந்த 27,812 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்டங்களாக 21 இடங்களில்  ஏற்கனவே நடந்தது. இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட  அலுவலர்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவம் 15 வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று  தேர்தல் பணியில் ஈடுபடும் 9,910 வாக்குச்சாவடி அலுவலர்கள், 89 சோனல் பார்ட்டி அலுவலர்கள், 70 நுண்பார்வையாளர்கள், 3,920 காவலர்கள், பிற  மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் 595 பேர் என மொத்தம் 14,584 பேருக்கு தபால் வாக்கு செலுத்த படிவம் 15 வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தலில் பணிபுரியவுள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த 4,308 பேருக்கும் படிவம் 15 வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதில் 15ம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று படிவம் 15 வழங்கியுள்ள 14,584 பேருக்கு தபால் வாக்குகள் அவர்களின் முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை முறையாக செலுத்தி சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அல்லது 22ம் தேதி காலை 8 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திலோ சேர்க்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Related Stories: