பாஜ போனதால் நன்மை ஓபிஎஸ் முன்னிலையில் செல்லூர் ராஜூ ‘தில்’ பேச்சு: வழக்கம்போல் மவுனம் காத்த மாஜி முதல்வர்

மதுரை: பாஜவுடன் அதிமுக கூட்டணி தொடரக் கூடாது என ஓபிஎஸ் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சூசகமாக பேசினார். ஆனால், அதற்கு எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காமல் ஓபிஎஸ் இருந்தார். உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கூட்டணியில் இருந்த அதிமுக, பாஜ கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் முன்னாள் அமைச்சர்கள் உட்பட இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி விமர்சித்து பிரசாரம் செய்கின்றனர்.

மதுரையில் நேற்று முன்தினம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘அதிமுக, பாஜ இடையே கூட்டணி இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது நாங்கள் ஓட்டு கேட்டு சென்றபோது, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இன்று அந்த நிலை இல்லை. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று, பிரசாரம் செய்ய முடிகிறது. இந்த நிலை தொடர வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியும்’ என்றார். இதைக்கேட்டு அதிமுக தொண்டர்கள் கைத்தட்டி ஆதரவு தெரிவித்தனர். செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு, ஓபிஎஸ் எந்த பதிலும் சொல்லாமல், வழக்கம் போல் பேசி விட்டு சென்றதால், அதிமுக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Related Stories: