நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் தந்ததுபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுக்கு வெற்றியை தாருங்கள்: தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை:திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காணொலி வாயிலாகத் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தரப்பட வேண்டும் என்று, இடைக்காலத் தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் காவிரி நடுவர் மன்றத்திற்குப் பெற்றுத்தந்தவர் கலைஞர். பின்னர், இறுதித் தீர்ப்பைப் பெற வழக்கை விரைந்து முடிக்க பாடுபட்டதும் கலைஞருடைய ஆட்சிதான். காவிரி இறுதித் தீர்ப்பும் கலைஞர் முதல்வராக இருந்த போது தான் 2007ம் ஆண்டு வந்தது.இவ்வாறு நீண்ட நெடிய போராட்டங்களின் வாயிலாக, தமிழ்நாட்டின் காவிரி உரிமையை காப்பாற்றிய இயக்கம்தான் திமுக.

காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக, நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தின் தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய பாஜக அரசு- இதனைச் செயல்படுத்தவில்லை.‘பல்லக்குத் தூக்கி’யாக இருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியும் ஒன்றிய அரசைத் தட்டிக் கேட்கவில்லை. ஆனால், உடனே காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்று போராடியதும் திமுகதான். தமிழ்நாடு வந்த பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டினோம். கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டோம். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நான் மேற்கொண்டேன். இரண்டு குழுக்களாக இந்தப் பயணத்தை திமுக நடத்தியது.  திருச்சி முக்கொம்பில் இருந்து நான் பயணம் மேற்கொண்டேன்.

டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்ல- தமிழ்நாட்டு உழவர்களுக்கு மட்டுமல்ல- மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிச்சு வாக்களித்ததன் மூலமாக-ஒட்டுமொத்த இந்திய வேளாண் பெருங்குடி மக்களுக்கே, துரோகியாக விளங்கியவர் தான் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி. அவரை ‘பா.ஜ’ பழனிசாமி என்றே அழைக்கலாம். வயிற்றுக்குச் சோறு போடும் வேளாண் உழவர்கள், தங்களுடைய உரிமைகளை பாதுகாக்கப் போராடினால், அவர்களை பார்த்து ‘தரகர்கள்’-என்று ஒருத்தர் சொல்கிறார் என்றால், அவருக்கு எப்படிப்பட்ட கல் நெஞ்சம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். நான் பழனிசாமியை பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். பாஜவிற்கு ஒரு ஆபத்து என்றால் ஓடோடி வந்து முட்டுக்கொடுத்து, ‘டப்பிங் பேசும்’ பழனிசாமி,பிரதமர் அவர்களே மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டார்.

இப்போதாவது போராடிய உழவர்களை ‘தரகர்கள்’ என்று கொச்சைப்படுத்தியதற்கும் - மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்கும் - வேளாண் பெருங்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா. இப்போது, வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தந்துள்ள அரசு. நானும் ஒரு விவசாயிதான் என்று சொல்லிக்கொண்டு, பழனிசாமி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாரா, இல்லை. கடந்த முறை நான் தஞ்சை வந்தபோதே, மாவட்ட ஆட்சியர் ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு, சாதனையாக நெல் சாகுபடி அதிகம் ஆகியிருக்கிறது என்று அவர் சொன்னார். 48 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை அளவாக, 1 லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் சொன்னார். குறுவை இலக்கு என்பது 1 லட்சத்து 6 ஆயிரத்து 250 ஏக்கர் தான். அதையும் தாண்டி மிக அதிகமாக நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுகவை எதிர்க்க திமுகவிற்குத் தெம்பும் திராணியும் இல்லை’-என்று, பழனிசாமி பேசியிருக்கிறார். அவர் தூக்கத்தில் பேசுகிறாரா என்று தெரியவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை பழனிசாமி மறந்துவிட்டாரா.

தனது பதவியை வைத்து, தமிழ்நாட்டு மக்களுக்குத் துளியும் நன்மையைச் செய்யாத பழனிசாமிக்கு- ஊழல் முறைகேடுகளில் மட்டுமே அக்கறையாக இருந்த பழனிசாமிக்கு- இப்போதுதான் மக்களைப் பற்றி நினைவு வந்திருக்கிறது போல. மக்களால் புறந்தள்ளப்பட்ட இந்தக் கூட்டம் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறது. நான் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, காணொலி வழியாகப் பரப்புரை செய்வதை சிலர் குறை சொல்கிறார்கள்; விமர்சனம் செய்கிறார்கள். நாள்தோறும் மக்களோடு மக்களாக இருக்கும் நான் நேரடி பரப்புரை செய்தால், கூடுகின்ற கூட்டத்தை பார்த்து இவர்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று, அனைவருக்கும் நன்றாக தெரியும்.

நாள்தோறும் கோட்டையில் பணிகளை முடித்துவிட்டு, மாலையில் காணொலி வாயிலாக உங்களைச் சந்தித்து, திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஆதரவு கேட்கிறேன்.சிலர் கடந்தகாலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளைப் பரப்புரைக்கு அனுமதிக்காமல், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அவர்கள் மட்டும் பரப்புரைக்கு சென்றார்கள். மக்கள் ஆதரவு தந்தார்களா? ரிசல்ட் என்ன ஆனது? நியாபகம் இருக்கிறதா? பச்சைப் பொய்களைக் கூறி அனைவரையும் ஏமாற்றிட முடியாது என்பதை, பழனிசாமி-பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனி உணர வேண்டும். இப்போதும் மக்கள் அதை உணர்த்தத்தான் போகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலிலும்-சட்டமன்றத் தேர்தலிலும் - ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கொடுத்த சவுக்கடியை-தண்டணையை-இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு தாருங்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் - சட்டமன்றத் தேர்தலிலும் - ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கொடுத்த வெற்றியை - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க.வுக்குத் தாருங்கள். அதை முழுமையான வெற்றியாகத் தாருங்கள். சமூக விரோத கட்சிகளைத் தூக்கி எறிந்து- திமுகவிற்கு- உதயசூரியன் சின்னத்திலும்- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நமது கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு- அவரவர் சின்னங்களிலும் வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தாருங்கள். விரைவில் நாம் வெற்றிவிழாவின்போது நேரில் சந்திப்போம். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: