நெல்லையில் தேர்தல் பிரசாரம் தமிழக சட்டசபையை முடக்கிப் பாருங்களேன்...: எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

நெல்லை: தமிழக சட்டசபையை உங்களால் முடிந்தால் முடக்கித்தான் பாருங்களேன் என நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்து பேசினார்.நெல்லை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை டவுன் வாகையடி முனையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று பேசியதாவது: நெல்லையில் இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தின் ஆரவாரத்தை பார்த்தால் வாக்கு கேட்கவே தேவையில்லை. ஆண்களை விட பெண்களே இங்கு அதிகம் காணப்படுகின்றனர். உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு காரணமாக மகளிரை அதிகம் காண முடிகிறது. பெண்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. திருச்சி, கரூர், நாகர்கோவில் என நான் போகிற இடங்களில் எல்லாம் திமுகவிற்கு நல்ல எழுச்சியை காண்கிறேன்.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையை முடக்கப் போகிறேன் என்கிறார். தமிழக சட்டசபையை உங்களால் முடிந்தால் முடக்கித்தான் பாருங்களேன். நமது மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் 159 பேர் சட்டசபையில் உள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் இல்லை என்ற நிலை இருந்தது. அப்படியொரு இக்கட்டான சூழலில் பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டார். வட இந்திய ஊடகங்களின் கருத்து கணிப்பில் இந்தியாவிலே நம்பர் 1 முதல்வராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் காணாமல் போய்விட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

நான் மக்களோடு மக்களாக உங்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கிறேன். சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியை பெற்றவர்தானே அவர். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்றார் தலைவர் கலைஞர். அவரது வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் தருவேன் என்ற அவர், சொன்னபடியே 2 தவணைகளில் அதை தந்தார். மகளிருக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுத்தார். அதிமுக அதெல்லாம் எப்படி முடியும் என கேள்வி எழுப்பியபோது, அதை செய்து காட்டினார். ஒன்றிய அரசுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் நம் முதல்வர். இந்த ஆட்சியின் சாதனைகள் தொடர உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: