திருவண்ணாமலை நகரின் குடிநீர் பஞ்சத்துக்கு நிரந்தர தீர்வு ₹5,700 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்-பொதுப்பணித்துறை அமைச்சர் பேச்சு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, திமுக வேட்பாளர்கள் 10வது வார்டு எஸ்.கணேசன், 8வது வார்டு ராஜாத்தி விஜயராஜ், 35வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.பல்கீஸ் ஆகியோரை ஆதரித்து, அந்தந்த வார்டுகளில் தேர்தல் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும், 25வது வார்டு முனியம்மாள் கண்ணாயிரம், 26வது வார்டு க.பிரகாஷ், 28வது வார்டு கோபிசங்கர், 27வது வார்டு கீதாமுருகன், 32வது வார்டு க.ஏழுமலை ஆகியோரை ஆதரித்து, திறந்த வேனிலிருந்து தெருமுனை பிரசாரம் செய்தார். அப்போது, அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் முதன்மையான சாதனை முதல்வராக திகழ்கிறார். இந்த தொகுதியில் 95 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்தீர்கள். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறேன்.

எனவே, ஆளுங்கட்சி திமுக, அமைச்சர் திமுக, எம்எல்ஏ திமுக. எனவே, வரப்போகிற நகரமன்றத் தலைவரும் திமுக என்ற நிலையில் நீங்கள் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், அரசின் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். திருவண்ணாமலை நகரில் தங்குதடையின்றி குடிநீர் கிடைக்க திமுகதான் காரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வராக இருந்தபோது 3வது கூட்டுக் குடிநீர் திட்டம் இங்கு நடைமுறைக்கு வந்தது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால், தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை நகருக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். இத்திட்டத்துக்கு எவ்வளவு செலவாகும் என்றார். சுமார் ₹5700 கோடி செலவாகும் என்று தெரிவித்தேன். இத்திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைதர இருக்கிறார்.

திருவண்ணாமலை புதிய பஸ் நிலையத்துக்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தற்போதுள்ள பஸ் நிலையம் 3.5 ஏக்கரில் உள்ளது. உலகமெங்கும் வருகைத்தருகிற பயணிகளுக்கு, நவீன வசதிகளுடன் 10 ஏக்கர் பரப்பளவில், புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது. அதற்கான பணிகள் விரையில் தொடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது, எம்பி.,சி.என்.அண்ணாதுரை, மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.தரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா, டி.வி.எம்.நேரு, பொதுக்குழு உறுப்பினர் ப்ரியா விஜயரங்கன், ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன், த.ரமணன், பெ.கோவிந்தன், கோ.ரமேஷ், வக்கீல் கதிரவன், இல.குணசேகரன், ஜெ.மெய்கண்டன், இரா.பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: