ரூ.3 கோடி மோசடி வழக்கில் ஜாமீனில் உள்ள ராஜேந்திரபாலாஜியிடம் 8 மணி நேரம் விசாரணை: சொத்து மதிப்பு உட்பட 134 கேள்விகள் கேட்டனர்

விருதுநகர்:  ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள அதிமுக  முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொந்த ஊரான திருத்தங்கலில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்காக நேற்று காலை 11 மணிக்கு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆஜரானார். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மதியம் 2 மணி வரை நடைபெற்றது. அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் உணவருந்தி விட்டு 3 மணிக்கு வந்த ராஜேந்திர பாலாஜியிடம் இரவு 8 மணி வரை விசாரணை நடைபெற்றது.

இவ்விசாரணையில், வேலை வாங்கி தருவதாக அவர் பணம் பெற்றது உண்மையா? யார், யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினார்? அதை எங்கு வைத்துள்ளார்? பணத்தை அவரே வாங்கினாரா? உதவியாளர்கள் மூலம் வாங்கினாரா? பணத்தை திருப்பி கொடுத்தாரா? வாங்கிய பணத்தில் பங்கு தொகையாக யாருக்கு கொடுத்தார் என்பது தொடர்பான 134  கேள்விகளை ராஜேந்திரபாலாஜியிடம் கேட்டனர். உதவியாளர் விவரம், அவர்களின் சொத்து மதிப்பு, கட்சியில் பொறுப்பில் இருக்கிறார்களா, விஜயநல்லதம்பி கட்சியில் எப்போது சேர்ந்தார் என்றெல்லாம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இக்கேள்விகளுக்கு ராஜேந்திரபாலாஜியின் பதில்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: