சென்னையில் ரவுடி மனைவியின் காதல் விவகாரம்; போலீசாரை கார் ஏற்றி கொல்ல முயன்ற ரவுடி கும்பல் துப்பாக்கி முனையில் சுற்றி வளைப்பு

* எஸ்ஐ, காவலர் படுகாயத்துடன் சிகிச்சை

* காட்பாடியில் சினிமா பாணியில் பரபரப்பு

வேலூர்: சென்னையில் தேடப்படும் குற்றவாளி கும்பல் வேலூருக்கு காரில் வருவதாக வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணனுக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி- குடியாத்தம் சாலையில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தியபோது, காரை நிறுத்தாமல் அந்த கும்பல் போலீசார் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சித்தது. அப்போது சுதாரித்துக்கொண்ட போலீசார் விலகி தப்பினர்.

ஆனாலும் இதில் ஒரு எஸ்ஐ, ஒரு காவலர் படுகாயமடைந்தனர். ஆனாலும் சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனே அந்த கும்பலை வாகனங்களில் சினிமா பாணியில் துரத்திச்சென்றனர். அந்த கார் காட்பாடி அடுத்த எல்.ஜி. புதூர் அருகே சென்றபோது, போலீசார் காரின் டயரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் டயர் வெடித்து, கார் சாலையோரம் நின்றது. அப்போது காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ரவுடி ஒருவன் தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து காரில் இருந்த மேலும் 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்களில் ஒருவர் பேரணாம்பட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பேரணாம்பட்டு அடுத்து ஏரிக்குத்தி பகுதியைச் சேர்ந்த இம்ரான்(35) என்பதும், மற்றவர்கள் சென்னையைச் சேர்ந்த மாதவன், மணிபாலன், பாஷா, அசோக்குமார் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும், சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியின் மனைவியுடன் வாலிபர் ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் ரவுடியின் மனைவியை காதலன் அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகும்பல்  வாலிபரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுதொடர்பாக மிரட்டல் விடுத்தவர்களை சென்னை போலீசார், தேடிவந்துள்ளனர். இதற்கிடையே தான் இந்த கும்பல் வேலூருக்கு தப்பி வந்த போது போலீசிடம் சிக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த எஸ்ஐ மற்றும் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பிடிபட்ட நபர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: