அதிமுக ஆட்சியில் வயலுக்கு இறைத்த நீர் வாய்க்காலுக்கே வரவில்லை: நாஞ்சில் சம்பத் பிரசாரம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இது உள்ளாட்சி மன்றத்திற்கான தேர்தல். ஒரு ஐந்தாண்டு காலம் மாநகராட்சி பிரதிநிதிகள் இல்லாமலேயே தமிழ்நாடு தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறது. இந்திய அரசியலில் எந்த ஒரு மாநிலத்திலும் நடக்காத அநியாயம், வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் வகையில் தேர்தலையே ரத்து செய்தார்கள். எதிரிகள் வலுவுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயல்வார்களே தவிர அவர்கள் வலுவுள்ளவர்கள் அல்ல. மக்கள் அவர்களின் பக்கம் நிற்கவில்லை.

இன்று நாடு முழுவதும் ஒரு கலவர சூழலையும், ஒரு கலக சூழலையும் உருவாக்கி இந்த நாட்டையே காவிமயமாக்க துடிக்க கூடிய கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்கின்ற வரலாற்று கடமையில் திமுக இன்று தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று சொல்லமாட்டேன், ஒரு அயோக்கியதனத்தை ஆளுநரே செய்கிறார் என்பதை வெளிப்படையாகவே இன்று பதிவு செய்கிறேன். ஒரு ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திருப்பி அனுப்ப எந்த அதிகாரமும் இல்லை, ஒரு கன்கரன்ட் லிஸ்டில் இருக்கின்ற கல்வி சார்ந்த, நீட் சார்ந்த பிரச்னையில் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை திருப்பி அனுப்புவதற்கு இவருக்கு அதிகாரம் இல்லை,

அதன் மீது கருத்து சொல்ல அதிகாரமும், கேள்வி கேட்கும் அதிகாரமும் குடியரசு தலைவருக்குக்தான் இருக்கிறதே தவிர ஆளுநருக்கு இல்லை. இதனை தெரிந்துகொண்டு செய்தாரா, தெரியாமல் செய்தாரா எனக்கு தெரியாது. அதிமுக ஆட்சியில் ஊருக்கு ஊர் போடக்கூடிய எல்இடி விளக்குகளிலே ஆயிரம் கோடி அடித்திருக்கிறார் வேலுமணி. நிர்வாகம் எப்படி இருந்திருக்கும். வயலுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கு போனால் தப்பில்லை, ஆனால் வயலுக்கு இறைத்த நீர் வாய்க்காலுக்கே வராமல் சிலர் வசதிக்கு மட்டுமே பாய்ந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: