எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கல்லூரிகள் தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவு: 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கை கல்லூரிகளை தேர்வு  செய்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சென்னை உட்பட  38 அரசு மருத்துவ கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இடங்கள்   ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள்   இணையதளத்தில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் தகவல்  தெரிவித்தனர்.   எம்.பி.பி.எஸ்,  பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 6,082  கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த  மாணவர்களுக்கான சான்றிதழ்   சரிபார்ப்பு பணிகள் கடந்த 8ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. சென்னையில் ஸ்டான்லி  மருத்துவ கல்லூரி, சென்னை  மருத்துவ கல்லூரி,  கீழ்பாக்கம் மருத்துவ  கல்லூரி, ஓமந்தூரார் அரசு  மருத்துவ கல்லூரி மற்றும்  தமிழ்நாடு அரசு  பல்மருத்துவ கல்லூரிகளிலும், அதைப்போன்று தமிழகம்  முழுவதும் 38 அரசு மருத்துவ  கல்லூரிகளில் மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை சரிபார்த்துக் கொண்டனர்.

நேற்றுடன் இப் பணி முடிவடைந்தது. இதையடுத்து  கல்லூரிகள்  குறித்த விபரங்கள் வரும் 15ம் தேதி  https://tnhealth.tn.gov.in மற்றும்  https://tnmedicalselection.net ஆகிய  இணையதளங்களில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து 16ம் தேதி   கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை   பெற்று 17ம் தேதி முதல் 22ம் தேதி மாலை  3  மணிக்குள் அந்தெந்த கல்லூரிகளில்   சேர்ந்து விட வேண்டும். அவ்வாறு  சேராத  மாணவர்களின் இடங்கள் காலியாக   அறிவிக்கப்பட்டு இரண்டாம் கட்ட   கவுன்சிலிங்கில் இடம் பெறும் என்று மருத்துவ  கல்வி இயக்ககம்   தெரிவித்துள்ளது.     

Related Stories: