ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இந்த மாதத்துக்கான சீராய்வு கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 8ம் தேதி துவங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார். இதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

* ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை; 4 சதவீதமாகவே நீடிக்கிறது. இதுபோல், ரிசர்வ்ஸ் ரெப்போ விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக உள்ளது. வட்டியில் மாற்றம் வேண்டாம் என, குழு உறுப்பினர்களில் 5 பேர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, ரெப்போ வட்டியை 1.15 சதவீதம் குறைத்துள்ளது.தொடர்ந்து 10வது முறையாக வட்டி மாற்றம் செய்யப்படவில்லை.

* சில்லரை விலை பண வீக்கம், 2022-23 நிதியாண்டில் 4.5 சதவீதமாகவும், 2021-22 நிதியாண்டில் 5.3 சதவீதமாகவும் இருக்கும்.

* வரும் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), 7.8 சதவீதமாக இருக்கும்.

* இ-ருபி எனப்படும் பிரீபெய்டு டிஜிட்டல் வவுச்சர்களுக்கான உச்ச வரம்பு தற்போது ₹10,000 ஆக உள்ளது. இது ₹1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. மேலும், ஒரு முறைக்குமேல் இந்த வவுச்சரை பயன்படுத்தலாம்.

* வணிக பரிவர்த்தனைகளுக்கு என்ஏசிஎச் வரம்பு ₹1 கோடியில் இருந்து ₹3 கோடியாக உயர்த்தப்படுகிறது.

* தனியார் கிரிப்டோ கரன்சிகள், நுண் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு இடையூறு செய்து அச்சம் விளைவிப்பவையாக அமைந்துள்ளன. இவற்றில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கிரிப்டோகரன்சிகளுக்கு மதிப்பு இல்லை என உணர்ந்து அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கச்சா எண்ணெய் மற்றும் உணவு பொருட்களின் விலை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுமையாக உள்ளது. இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு விஆர்ஆர் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு வரம்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ₹1 லட்சம் கோடியில் இருந்து ₹2.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது,  என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories: