திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்திற்கு தடை; 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு: தாளவாடியில் நாளை அவசர ஆலோசனை

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து  நாளை தாளவாடியில் ஆலோசனை நடத்த உள்ளதாக மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ளது திம்பம் மலைப்பாதை. இங்கு இரவு நேர வாகன போக்குவரத்தால் வாகனங்களில் அடிபட்டு வன விலங்குகள் உயிரிழந்து வந்தன.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வக்கீல் சொக்கலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு கலெக்டர் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்த உத்தரவை நாளை (10ம் தேதி) முதல் அமல்படுத்தவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்தை தடை செய்யுமாறும் உத்தரவிட்டது.

இதனை கண்டித்து நாளை (10ம் தேதி) காலை தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் தாளவாடி மலைப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு தாளவாடி மலைப்பகுதி மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாளவாடி தாலுகாவில் உள்ள 10 ஊராட்சிகளில் வசிக்கும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினந்தோறும் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக சத்தி, கோபி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கிறார்கள்.

மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிப்பதன் மூலம் தாளவாடி, ஆசனூர், மற்றும் கேர்மாளம் ஆகிய மலைப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் தனித்தீவாக மாறும் அபாயம் உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினர். வியாபாரிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய கூட்டமைப்பினர் நேற்று மாலை தாளவாடியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். நாளை (10ந் தேதி) காலை பண்ணாரியில் நடைபெறும் போராட்டத்தில் தாளவாடி மலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: