சிறப்பு வரி விதிப்பால் எகிறியது; புதுச்சேரி கலால் வருவாய் ரூ1000 கோடி இலக்கை எட்டுகிறது: துணை ஆணையர் சுதாகர் தகவல்

புதுச்சேரி: கலால்துறையின் பல்வேறு நடவடிக்கைகளால் முதன்முறையாக கலால் வருவாய் ரூ. 1000 கோடி இலக்கை எட்டியுள்ளது. சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் இயற்கை வளம் போதுமானதாக இல்லாததால், அரசின் வருவாய் விற்பனை, கலால், சுற்றுலா ஆகியவற்றை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளது. கோவிட் பொது முடக்கத்தால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்து போனதால் மாநிலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது நிலைமை மாறி வருவதாலும், சுற்றுலா மற்றும் பண்டிகை கால கொண்டாட்டங்களால் மது விற்பனை அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக 2021-22ம் நிதி ஆண்டுக்கான கலால் வருவாய் இலக்கு ரூ. 1000 கோடி இலக்கை எட்டவுள்ளது. 2019-20ம் ஆண்டுகளில் கோவிட் பாதிப்புக்கு மத்தியில் கலால் வருவாய் மொத்தமாக ரூ. 857 கோடியாக இருந்தது ரூ. 81.70 கோடிக்கு சாராய விற்பனை இருந்தது. அதே நேரத்தில் அடுத்த ஆண்டுகளில் 2020-21ம் ஆண்டுகளில் பொதுமுடக்கம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக ரூ. 91 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு, மொத்தமாக ரூ. 766 கோடி மட்டுமே வரி வசூலிக்கப்பட்டது.

எனவே வருவாய் இழப்பை  ஈடுட்டும் வகையில் மதுபானங்கள் மீது ஜூலை மாதத்தில் 20 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டதான் காரணமாக வருவாய் திடீரென உயர்ந்தது. 60 நாட்கள் பொதுமுடக்கம், 30 நாட்கள் கட்டுப்பாடுகளால் வருவாய் குறைந்தது. மேலும் கூடுதலாக ரூ. 180 கோடி முதல் ரூ. 200 கோடிவரை  கூடுதலாக வருவாயை பெருக்க வேண்டிய கட்டாயமும் காலல் துறைக்கு இருந்தது. இது குறித்து கலால்துறை துணை ஆணையர் சுதாகரிடம் கேட்டபோது: இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கான நிதியாண்டுக்குள் கலால்வரி ரூ. 1000 கோடி இலக்கை எட்டிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தற்போதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள்(ஐஎம்எல்) மீதான வரியின் மூலம் ரூ. 842 கோடியும், சாராயம் மூலம் 119.28 கோடியும் வருவாய் கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது தற்போதுவரை ரூ. 870 கோடி ஒட்டுமொத்தமாக கிடைத்திருக்கும். இன்னும் மார்ச் மாதம் முடிவதற்குள் ஆயிரம் கோடி இலக்கை எட்டிவிடும். தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மெல்ல மக்கள் வெளியே வருகிறார்கள். புத்தாண்டு, பொங்கல் என கொண்ட்டாட்டங்களின் போது சுற்றுலாப்பயணிகள் வருகை, 20 சதவீத சிறப்பு வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கலால் மூலம் கிடைக்கும் வருவாய் உயர்ந்துள்ளது.

அதேபோல் வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் கலால்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம். மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் விற்பனை, கொள்முதல் ஆகியவை ஆன்லைன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அதோடு அதிரடி சோதனை நடத்த பல்வேறு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. சட்டவிரோத மது தயாரிப்பு, விற்பனை, கடத்தல் ஆகியவையும் பெரிய அளவில் நடைபெறாவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சட்டவிரோத மது விற்பனை அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, பொதுமக்கள் உடல் நிலையையும் பாதிக்கிறது. எனவே இதனை அனுமதிக்க முடியாது என்றார்.

Related Stories: