நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்-தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் உள்ள 108 வார்டு உறுப்பினர்கள், 11 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 294 உறுப்பினர்கள் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, 1382 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து வேட்புமனுக்கள் தள்ளுபடி மற்றும் திரும்ப பெற்றது உள்ளிட்டவைகளுக்கு பின் 1253 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகரட்டி, கேத்தி மற்றும் பிக்கட்டி ஆகிய பேரூராட்சிகளில் தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதனால், நகராட்சிகளில் 108 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 183 வார்டுகளுக்கும் என மொத்தம் 291 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதனிடையே, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. மருத்துவ பணிகள் தேர்வு வாரிய தலைவர் மற்றும் தேர்தல் பார்வையாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் தலைமை வகித்து பேசியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணைய விதிமுறை புத்தகத்தில் பார்த்து அறிந்து கொண்டு நிவர்த்தி செய்திட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்களை அழைத்து தனியாக கூட்டம் நடத்தி தேர்தல் நடத்தை விதிகள், வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து விளக்கமளிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வாக்குசாவடி முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் செய்ய வேண்டும். வாக்குசாவடிகளில் அனைத்து வசதிகளும் உள்ளனவா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

வாகன அனுமதி, பிரசார அனுமதி போன்றவற்றிற்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கிட வேண்டும். காவல்துறையினர் வாக்குசாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்களை அனுமதிக்க கூடாது. அரசியல் கட்சியினரை அனுமதிக்க கூடாது. அனைத்து அலுவலர்களும் சமரசமின்றி தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி பேசுகையில்,``தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும் அனைவரும் கோவிட் நடைமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும்.

சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாத யாத்திரை, சைக்கிள், மோட்டார் வண்டி ஊர்வலம் ஆகியவை வரும் 11ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஊர்வலம், குறிப்பிட்ட வேட்பாளர்கள் அல்லது தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவும் வரும் 11ம் தேதி வரை அனுமதிக்கப்படாது. வாக்கு சேகரிக்கும் காலத்தில் அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு பேரணி நடத்துவதற்கு அனுமதியளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்’’ என்றார்.

Related Stories: