திருப்பதியில் ரதசப்தமி ஒரே நாளில் 7 வாகனங்களில் அருள் பாலித்த மலையப்பர்: பக்தர்கள் இன்றி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: திருப்பதியில் ரதசப்தமியை முன்னிட்டு ஒரேநாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். மேலும், பக்தர்களின்றி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிரமோற்சவத்தில் 9 நாட்கள் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் 16 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதேபோல், ஆண்டுதோறும் ரதசப்தமியன்று ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வருவார். இதனை ‘மினி பிரமோற்சவம்’ என பக்தர்கள் அழைப்பார்கள்.

அதன்படி, ரதசப்தமி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தங்க சூரிய பிரபை வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயிலில் உள்ள சம்பங்கி(கல்யாண உற்சவ) மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, காலை 9 மணிக்கு சின்னசேஷ வாகனம், 11 மணிக்கு கருட வாகனம், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பக்தர்கள் இன்றி நடந்தது. மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும், 6 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணியளவில் சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ரதசப்தமிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, 7 வாகன சேவையும் பார்த்து அருள் பெறுவார்கள். ஆனால், கடந்த ஆண்டைப்போல் இந்தாண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் மாடவீதி உலா ரத்து செய்து கோயில் கல்யாண மண்டபத்தில் சுவாமி அருள்பாலித்தார். தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories: