சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% வார்டு ஒதுக்கீடு உத்தரவை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின் எப்படி தலையிட முடியும். அரசியல் சாசன தடை உள்ள நிலையில் வார்டு வரையறையில் எப்படி தலையிட முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் வாதங்களை முன் வைத்தார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர், வார்டு மறுவரையறை செய்து 2018ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து அப்போதே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்பே வழக்கு தொடர்ந்து இருந்தால் மீண்டும் வார்டு மறுவரையறை செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Related Stories: