‘என்னம்மா கண்ணு சவுக்கியமா...?’ கவாத்து விழாவில் ஐஜி எஸ்பி பாடிய பாடல்: வலைதளங்களில் வைரல்

கோவை: கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நேற்று முன்தினம் கோவை மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான கூட்டு கவாத்து நிறைவு விழா நடந்தது. இதில் 450 ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர். ஆண்டு முழுவதும் பல்வேறு பயிற்சி, பணி செய்த போலீசாரை உற்சாகப்படுத்த, அவர்களை மன ரீதியாக ஊக்கப்படுத்த இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்க்கெஸ்ட்ரா, ஆடல், பாடல் என போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் பாட்டு பாடி, ஜாலியாக பேசி விழாவை கலகலப்பாக்கினர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மைக் பிடித்து பாட வந்தபோது அவருடன் போட்டிக்கு பாட கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினமும் மேடை ஏறினார். இருவரும் ‘‘மிஸ்டர் பாரத்’’ படத்தில் வரும், ‘‘என்னம்மா கண்ணு சவுக்கியமா...’’என்ற பாடலை பாடினர்.

சத்யராஜ் பாடுவது போன்ற பாடல் வரிகளை ஐஜி சுதாகரும், ரஜினிகாந்த் பாடுவது போன்ற வரிகளை எஸ்பி செல்வநாகரத்தினமும் பாடினர். சினிமா பாடகர்கள்போல் அசத்தலாக இவர்கள் இருவரும் பாடி அசத்தினர். இதை அங்கேயிருந்த போலீசார் சிலர் வீடியோ பதிவு செய்து வெளியிட அது வைரலாக பரவியது. விழாவில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன், ‘‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ...’’ என தனியாக பாடி அசத்தினார். விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், கோவை சரக டிஐஜி முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகாரிகள், போலீசார் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த விழா இருந்தது. போலீசாருக்கு பாராட்டு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Related Stories: