தகுதி இல்லாதவர்கள், மாற்றுக்கட்சியினருக்கு வாய்ப்பு சென்னை அதிமுகவில் கோஷ்டி பூசல்: மேலிடம் முடிவால் விசுவாசிகள் விரக்தி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட தகுதியில்லாதவர்களுக்கும் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதிமுகவின் உண்மை விசுவாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் அக்கட்சியில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பல இடங்களிலும் தகுதியில்லாதவர்களுக்கும் சில இடங்களில் புதுமுகங்களுக்கும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தகுதி உள்ள நபர்களுக்கு இடம் தராமல் கட்சியில் புதிதாக வந்தவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொகுதிக்கு உட்பட்ட 44வது வார்டில் பகுதி செயலாளர் இளங்கோவின் மனைவிக்கு சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. 36வது வார்டில் பகுதி செயலாளர் என்.எம்.பாஸ்கர் சீட்டு கேட்டிருந்தார். இவர் ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இதனால் இவருக்கு சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இவருக்கு சீட்டு மறுக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கட்சியில் சேர்ந்த வட்ட செயலாளர் குமாருக்கு சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.

37வது வார்டில் போட்டியிட முன்னாள் மாமன்ற உறுப்பினர் சரவணன் மனு அளித்திருந்தார். இவர் அந்த பகுதியில் செல்வாக்கு மிக்கவர். ஆனால் அவருக்கு 45வது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 45வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்ட கடல் ராஜன், தாமரைச்செல்வி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 34வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்ட வட்ட செயலாளர்கள் ஆனந்த், கனகராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு முன் கட்சியில் சேர்ந்த ஜம்புலி பாலாஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 35வது வார்டில் வட்ட செயலாளர் மகன் என்ற ஒரே காரணத்திற்காக டேனியல் சச்சின் மணி என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெரம்பூர் சட்டமன்றம் தொகுதியில், மாவட்ட செயலாளருக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியினரும் முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியினரும் செயல்பட்டு வருகின்றனர். மாஜி அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்ட ஜேகே.ரமேஷ், வெற்றிவேந்தன் ஆகியோருக்கு சீட் வழங்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பலருக்கு அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணிக்கு செல்லாமல் இருக்க அதிருப்தியாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. புதுப்பேட்டை படத்தில் ஒரு காட்சியில், தனுஷை பார்த்து சக நடிகர் ஒருவர், ‘’மேல என்ன நடக்குதுன்னே தெரியல முதல்ல இவன மாத்துங்க டா’’ என்று கூறுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதுபோன்று தற்போது பெரம்பூர் தொகுதியில் அரங்கேறி வருகிறது.

Related Stories: