பாஜகவில் இணைந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் மருமகள் அபர்ணா யாதவுக்கு நோ சீட்

லக்னோ : பாஜக கட்சியில் சமீபத்தில் இணைந்த முலாயம் சிங்கின் மருமகளுக்கு உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் இளைய மருமகளான அபர்ணா யாதவ், கடந்த 19ம் தேதி பாஜகவிற்கு தாவினார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் அபர்ணாவை பாஜக களமிறக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லக்னோவில் உள்ள 9 சட்டப்பேரவைக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் அபர்ணா யாதவின் பெயர் இடம் பெறவில்லை. லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் அபர்ணாவுக்கு வாய்ப்பு மறுத்துள்ள பாஜக, அங்கு வேறு ஒருவரை நிறுத்தியுள்ளது.

அதே நேரம், பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்த அமலாக்கத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராஜேஸ்வர் சிங்கிற்கு உத்தரப் பிரதேசத்தின் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு  பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச முதற்கட்ட தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

Related Stories: