நடிகை பலாத்கார வழக்கில் மீண்டும் பூதாகரம்; திலீப் ஐபோனை சர்வீஸ் செய்தவர் சாவில் மர்மம்: திட்டமிட்ட கொலையா? போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: நடிகர் திலீப்பின் ஐபோனை சர்வீஸ் செய்த வாலிபர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தார். இதில் மர்மம் உள்ளதாக அவரது அண்ணன் போலீசில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ேகரளாவில் நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் நடிகர் திலீப், அவரது தம்பி அனூப், தங்கை கணவர் சுராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 பேரும் பயன்படுத்திய 6 போன்களை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் திலீப் உள்பட 3 பேரும் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை இன்றைக்கு தள்ளிவைத்தார். அதன்படி இன்று பிற்பகல் விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் திலீப் ஐபோனை சர்வீஸ் செய்த நபர், சாலை விபத்தில் மரணம் அடைந்ததில் மர்மம் உள்ளது என்று, அவரது அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதுபற்றி விவரம் வருமாறு திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் சலீஷ் (42). ஆலுவாவில் உள்ள ஐபோன் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்தார். அவரிடம் தான் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திலீப் தனது ஐபோனை சர்வீசுக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து திலீப்புடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி திலீப் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மதியம் 2 மணியளவில் காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அங்கமாலி அருகே சென்றபோது ரயில்வே மேம்பால தடுப்பில் கார் மோதியதில் சலீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாதாரண விபத்தாகவே கருதினர். ஆனால் விபத்தை பார்த்தவர்கள் கூறுகையில், சலீஷின் காருக்கு மிக அருகே வேறொரு கார் அதிவேகத்தில் சென்றது. அந்த காரில் மோதாமல் இருக்க சலீஷ் காரை திரும்பிய போது காட்டுப்பாட்டை இழந்து பால தடுப்புசுவரில் கார் மோதியது என்று கூறினர்.

ஆனால் சலீஷ் காரை ஓட்டும்போதும் தூங்கியிருக்காம் என்றும், அதனால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் போலீஸ் கருதினர். இதற்கிடையே சலீஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டைரக்டர்கள் பாலசந்திரகுமார், பைஃஜூ ஆகியோர் சந்தேகம் எழுப்பினர். இதற்கிடையே சலீஷின் அண்ணன் சிவதாஸ் அங்கமாலி போலீசில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், தனது தம்பி விபத்தில் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்காலி போலீசார் தெரிவித்தனர். இது திட்டமிட்ட கொலையா? அல்லது சாலை விபத்தா? என்பது போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

போன் யாரிடம் ஒப்படைப்பு

இதற்கிடையே திலீப் தன்னிடம் இல்லை என்று கூறிய ஒரு போனை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக தெரியவந்துள்ளது. 2017 முதல் பயன்படுத்தி வந்த போனை நேற்று ஆஜர்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த போனில் தான் முக்கிய விவரம் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இந்த நிலையில் திலீப் ஒப்படைத்த போன்களை போலீசிடம் ஒப்படைப்பதா? அல்லது வேறு ஏஜென்சியிடம் ஒப்படைப்பதா? என்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த பரிசோதனையில் பல முக்கிய விவரங்கள் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

Related Stories: