ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது

ஆனைமலை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து, கடந்த சனிக்கிழமை 70 அடி உயரம் கொண்ட மூங்கில் கொடிமரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆனைமலை வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றங்கரையில் வைத்து, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இன்று காலை கொடிமரம், ஆனைமலையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில், மாசாணியம்மன் கோயில் முகப்பு பகுதியில் கொடிமரம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை வரும் பிப்ரவரி 14ம் தேதி நடக்க உள்ளது. மேலும், 15ம் தேதி காலை சக்தி கும்பஸ்தாபனம், மாலை மகா பூஜை நடக்கிறது.  16ம் தேதி காலை 9.30 மணிக்கு குண்டம் கட்டுதல், இரவு 6 மணிக்கு சித்திர தேர் வடம் பிடித்தல், 10 மணிக்கு மேல், குண்டம் பூ வளர்த்தல், 17ம் தேதி காலை 9 மணி முதல் குண்டம் இறங்குதல், நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து 18ம் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு, இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது. இவ்விழாவின் இறுதியாக 19ம் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறும் என்று, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: