தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்-பலிகர்ம பூஜை செய்து கடலில் புனித நீராடினர்

கன்னியாகுமரி : இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் நேற்று(31ம் தேதி) தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்கள் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தனர்.

அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு விட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.

பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் ரயில் நிலையசந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோயில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கரதீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் ஆகியவற்றுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: