கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ம் தேதி நிலவில் மோதுகிறது: ராக்கெட் மோதுவதால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!

வாஷிங்டன் : தனியார் நிறுவனத்தால் கைவிடப்பட்ட ராக்கெட் ஒன்று வரும் மார்ச் மாதம் நிலவில் மோத இருப்பதாக நாசா கூறியுள்ளது. அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் 2015ம் ஆண்டு காலநிலை கண்காணிப்பு செயற்கை கோள் ஒன்றை ஃபேல்கான் 9 என்ற ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவியது. செயற்கைக்கோளை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்திய பிறகு, சில தொழில்நுட்ப காரணங்களால் ராக்கெட் பூமிக்கு திரும்ப முடியாமல் போனது. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அந்த ராக்கெட்டை விண்வெளியிலேயே கைவிடுவதாக அறிவித்துவிட்டது. கட்டுப்பாட்டை இழந்த ஃபேல்கான் 9 ராக்கெட் பூமியையும் நிலவையும் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் முன்பாகம் நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் 4ம் தேதி நிலவின் மேற்பரப்பில் ராக்கெட் மோத இருக்கிறது. சுமார் 4 டன் எடை உடைய பூஸ்டர் நிலவினை நோக்கி மணிக்கு 9290 கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டு இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் ராக்கெட்டின் உதிரி பாகங்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் நிலவில் மோதுவது இது முதன்முறை அல்ல என்று கூறியுள்ள நாசா, ஃபேல்கான் 9 ராக்கெட் மோதுவதால் பெரும் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் ராக்கெட் மோதலால் ஏற்படும் தாக்கத்தின் எதிரொலியாக நிலவின் மேற்பரப்பில் 30 முதல் 60 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்படும் என்று விண்வெளி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: