நீட் விலக்கு, தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசப்படும்: டெல்லியில் டி.ஆர்.பாலு பேட்டி

புதுடெல்லி: நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வில் இருந்து விலக்கு மற்றும் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு ஆகியவை குறித்து பேசப்படும் என டெல்லியில் திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அவைத் தலைவர் தலைமையிலான கூட்டம் மற்றும் அனைத்து கட்சி கூட்டம் ஆகியவற்றில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்ப்பில் மக்களவை குழுத்தலைவர் டி.ஆர் பாலு கலந்து கொண்டார். இதையடுத்து நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது, ‘நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னர் திமுக மற்றும் தோழமை கட்சிகள் நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்தி குரல் எழுப்பினோம்.

இதுவரை தமிழகத்தில் சுமார் 30 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரையில் அதன்மீது எவ்வித பரிசீலனையும் செய்யாமல் உள்ளதை கண்டித்து தான் அதனை குடியரசுத் தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும் நேற்று நடைபெற்ற அவை தலைவர் தலைமையிலான கூட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் நீட் தேர்வு விலக்கு கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி தர வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைத்துள்ளோம். இவைத்தவிர வெள்ள நிவாரண பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்பது, 73வது குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பு ஆகியவை தொடர்பாக பேச உள்ளோம் என  நடைபெற்ற அவை தலைவர் கூட்டத்திலும், அனைத்து கட்சி கூட்டத்திலும் வலியுறுத்தி தெரிவித்துள்ளோம்’ என்றார்.

Related Stories: